True or Fake?

Friday, 20 May 2016

இன்று நடைபெற்ற ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் விவாதிக்கப்பட்டுள்ளன





இன்று நடைபெற்ற ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் விவாதிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் சுங்கை பெசார், குவாலா கங்சார் ஆகிய இரு தொகுதிகளில் நாம் எதிர்நோக்கக்கூடிய இடைத்தேர்தல்களில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ம.இ.கா தயார்நிலையில் இருக்கின்றது. அதற்கான மேற்கோள் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுங்கை பெசார் தொகுதியில் ஏறக்குறைய 820 இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் அதிகமானோர் 7 வாக்குப் பெட்டிகளைச் சார்ந்தவர்கள். அதாவது, மேற்குறிப்பிட்டப்படி 7 வாக்குப் பெட்டிகளில் ஏறக்குறைய மொத்தம் 660 வாக்காளர்கள் இருக்கின்றனர். மீதமுள்ளவர்கள் எஞ்சியிருக்கக்கூடிய 20 வாக்குப் பெட்டிகளில் உள்ளனர். அதன் அடிப்படையில், சுங்கை பெசாரில் இருக்கக்கூடிய 6 கிளைத்தலைவர்களும் இந்த 7 வாக்குப் பெட்டிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு, அங்கிருக்கக்கூடிய 660 வாக்காளர்களை அடையாளங்கண்டு அவர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு அளிக்கக்கூடிய நிலையை உறுதிப்படுத்துவதற்கான வேலைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்றுவரையில் ஏறக்குறைய 250 வாக்காளர்கள் அடையாளம் கண்டுள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் மீதி இருக்கக்கூடியவர்களை அடையாளம் கண்டு, நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்குரிய வேலைகள் எளிமைப்படுத்தக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தத் தேர்தல் இயந்தரத்திற்குப் பொறுப்பாளராக சுங்கை பெசார் தொகுதியின் தலைவர் திரு ஸ்ரீதரன் இருப்பார். அவருக்கு உதவியாக சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கக்கூடிய மற்ற தொகுதித் தலைவர்கள் உடனிருப்பர்.

அதேப்போல் குவாலா கங்சாரில் 2299 இந்திய வாக்காளர்களில் 1369 பேர் அங்கிருக்கக்கூடிய 17 ம.இ.கா கிளைகளின் அங்கத்தினர்களாவர். அதன் அடிப்படையில் அவர்களை நாங்கள் அடையாளம் கண்டு விட்டோம். மீதி இருக்கக்கூடியவர்களை அடையாளம் காணக்கூடிய முயற்சிகள் தற்பொழுது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அநேகமாக இன்னும் ஒரு வாரக் காலக்கட்டத்தில் அதற்கான பணிகள் நடந்தேறும்.

அதன் பிறகு வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்துப் பிரச்சார வேலைகளும் தொடங்கப்படும். இதுவரையில் மக்களிடம் இருந்து வரக்கூடிய ஆதரவுகளும் நன்றாகவே உள்ளது. ஆகையினால், இந்த 2 இடைத்தேர்தகளிலும் ஏறக்குறைய இந்திய சமுதாயத்தின் ஆதரவு குறைந்தபட்சம் 70% முதல் 80% தேசிய முன்னணிக்கு இருப்பதை உறுதி செய்வதற்கான வேலைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இரண்டாவதாக, இடைத்தேர்தலை அடுத்து சமுதாயப் பிரச்சனைகள் தொடர்பாக நான் எல்லா தொகுதித் தலைவர்களையும் கண்டு வருகின்றேன். தொகுதித் தலைவர்களின் எதிர்பார்ப்புகளில் முக்கியமான ஒன்று அரசாங்கத் துறைகளில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகளாகும். பலர் இதனை ஓர் ஏமாற்றமாகவே கருதுகின்றனர். இதனைச் சரிசெய்வதற்கு நாங்கள் பலமுறை கொடுத்திருக்கக்கூடிய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 7% இந்தியர்களுக்கு அரசாங்கத் துறையில்  வாய்ப்புகள் வழங்கக் கோரி வலியுறுத்தியுள்ளோம். பிரதமர் அவர்கள் உதவக்கூடிய நிலையில் இருந்தாலும் அமலாக்கத்தில் இருக்கக்கூடியவர்கள் கொள்கைகளின் அடிப்படையில் அதனை முறையாக அமல்படுத்தவில்லை.

சமுதாயத்தில் சமூகப் பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன என்னும் பொதுவான கருத்தும் உள்ளது. இதற்கு நிலைத்தன்மை இல்லாததும் ஒரு காரணமாகும். இந்நிலையைச் சரிச்செய்வதற்கான நடவடிக்கைகளை ம.இ.கா மேற்கொள்ளும். அதேநேரத்தில் வறுமையில் இருக்கக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தரமான கல்விகளைப் பெறுவதற்குப் பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். எங்களிடமும் பலர் உதவி நாடி வருகின்றனர். எம்.ஐ.இ.டி வழியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஓரளவு உதவி செய்து வருகிறோம். இருந்தப்போதிலும், இப்பிரச்சனைகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆக, குறைந்த வருமானத்தில் இருக்கக்கூடிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களின் கல்வி தடையில்லாமல் நடைபெற வேண்டுமென்றால் அதற்குரிய கூடுதலான பொருளாதார உதவியை எப்படி கொடுக்க முடியும் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டிய சூழல் தற்பொழுது உள்ளது.

அடுத்ததாக, வருகின்ற 29ஆம் திகதி ம.இ.காவில் ஓர் அவசர மாநாட்டை நடத்தவிருக்கின்றோம். அதில், குறிப்பாக தேசிய முன்னணிக்கான ஆதரவு, ம.இ.காவின் மத்திய செயலவை செயல்பாட்டிற்கான ஆதரவு, வரக்கூடிய 14வது பொதுத்தேர்தல் தொடர்பாக ம.இ.கா எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய முயற்சிகள் குறித்தும் எடுத்துறைக்கப்படும். அதற்கு உதவியாக இருக்கக்கூடிய வகையில் ம.இ.காவின் உட்கட்சி தேர்தலும் நாட்டின் 14வது பொதுத்தேர்தலுக்குப் பின் நடத்தப்படுவதற்கான முடிவுகளும் அங்கு எடுத்துறைக்கப்படும்.

இதனைத்தொடர்ந்து, விரைவில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் ம.இ.கா இன்னும் அதிகமான பதவிகளைக் கொடுக்க வேண்டுமென பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். முன்னதாக ம.இ.காவிடம் 2 முழு அமைச்சர் பதவிகள் இருந்தன. தற்பொழுது ஒன்று மட்டுமே உள்ளது. மேலும், கூடுதலான துணையமைச்சர் பதவியும் கோரப்பட்டுள்ளது. ஆகவே, நமது பரிந்துரையை ஏற்றுக் கொள்வதற்கு இதுவே சரியான தருணமாகும். அதன் அடிப்படையில் ம.இ.காவில் இருக்கக்கூடிய தலைவர்கள் முக்கியமான பொறுப்புகளை வகித்துச் சிறந்த முறையில் சேவையாற்றக்கூடிய வாய்ப்பும் அமையும். எனவே, இதனை மனத்தில் வைத்துக் கொண்டு பிரதமர் அவர்கள் செயலாற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்
19 மே 2016

No comments:

Post a Comment