தைப்பூச நாளன்று புந்தோங் மின் சுடலைக்கு மேலும் வெ.50,000 மாநில அரசு வழங்கியது.
ஈப்போ – புந்தோங் மின் சுடலை நிர்மாணிப்புப் பணிக்காக ஏற்கனவே வெ.13 லட்சத்தை வழங்கியிருந்த பேராக் மாநில அரசாங்கம் தைப்பூசத்தை முன்னிட்டு மேலும் வெ.50,000ஐ மின் சுடலை பராமரிப்பிற்காக பேராக் மாநில அரசாங்கம் வழங்கியது.தைப்பூசத்திற்கு முதல் நாள் ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வருகை புரிந்த மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் இதனை தெரிவித்தார்.
மேலும்,வெ.50,000ஐ வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஆலய தலைவர் ஆர்.வீ.சுப்பையாவிடம் மந்திரி பெசார் மாதிரி காசோலையையும் வழங்கினார்.ஈப்போ இந்து தேவஸ்தானத்தின் தலைமையில் இயங்கும் புந்தோங் மின் சுடலை எதிர்நோக்கும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பேராக் மாநில ம இ கா தலைவர் டத்தோ வ.இளங்கோவும் பொது மக்களும் நிதி உதவிகளை வழங்கிய வேலையிலும் இதர செலவினங்களுக்காக நிதி உதவியை தேவஸ்தானம் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில்,புந்தோங்கில் நிர்மாணித்து வரும் மின் சுடலை தொடர்பில் அநாவசிய கருத்துக்களை பேசி மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்ட மாநில மந்திரி பெசார் மின் சுடலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.பேராக் மாநிலத்தில் தொடர்ந்து இந்திய சமுதாயத்தின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்வதில் மாநில அரசாங்கம் விவேகமாய் செயல்படுவதாகவும் அதற்கு டத்தோ இளங்கோ தலைமையிலான மாநில ம இ கா பெரும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பேராக் மாநில மந்திரி பெசார் ஈப்போ கல்லுமலை ஆலயத்திற்கு வருகை புரிவது பெருமிதமாக இருப்பதோடு பேராக் மாநிலம் அனைத்து மதங்களுக்கும் இன நம்பிக்கைகளுக்கும் வெளிப்படையான மதிப்பும் அங்கீகாரமும் வழங்கி வருவதற்கான பெரும் சான்று என மாநில ம இ கா தலைவரும் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ வ.இளங்கோ கூறினார்.
பேராக் மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் கல்வி,பொருளாதாரம் உட்பட அவர்களின் மேம்பாடு வளர்ச்சியில் மாநில ம இ கா மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆக்கப்பூர்வ திட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் தொடர்ந்து டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தலைமையிலான மாநில அரசாங்கம் பெரும் ஆதரவு வழங்கி வருவதோடு இந்திய சமுதாயத்தின் மீது தனித்துவ கவனத்தையும் அஃது கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
புந்தோங்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மின் சுடலை பணி அதன் நிறைவை அடந்த பின்னர் முறையாக செயல்படும் என கூறிய ஈப்போ இந்து தேவஸ்தானத் தலைவர் சுப்பையா ஆலய வளர்ச்சிக்கும் மின் சுடலை நிர்மாணிப்பிற்கும் பெரும் ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் விளங்கி வரும் மாநில அரசாங்கத்திற்கும் மாநில ம இ கா தலைவர் டத்தோ இளங்கோவிற்கு நிர்வாகத்தின் சார்பில் தனது நன்றியினை பதிவு செய்துக் கொண்டார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ஆலயத்திற்கு வருகை தந்ததோடு மின் சுடலை நிர்மாணிப்பிற்கு வெ.50,000ஐ மானியமாகவும் மந்திரி பெசார் வழங்கிய போது அவருடன் மாநில சபாநாயகர் தங்கேஸ்வரி,ஈப்போ மேயர் டத்தோ சம்ரிமான் உட்பட ம இ கா பொருப்பாளர்களும் பொது இயக்கத்தினரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment