True or Fake?

Monday 20 February 2017

மாணவர்கள் பொது அறிவை பெற்றிருப்பது காலத்தின் கட்டாயம்- கோபாலக்கிருஸ்ணன் வலியுறுத்து

காப்பார் – பள்ளியில் கற்பிக்கப்படும் கல்வியானது மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகோலும் அதேவேளையில் மாணவர்கள் மத்தியில் பொது அறிவின் திறன் மேலோங்கியிருக்க வேண்டும் எனவும் ம இ கா காப்பார் தொகுதி தலைவரும் சமூக சேவையாளருமான கோபாலக்கிருஸ்ணன் நினைவுறுத்தினார்.

பொது அறிவும் அதுகுறித்த நுண் அறிவுகளும் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கும் அவர்களின் நன் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பெரிதும் பங்காற்றும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போதிலிருந்து பொது அறிவு குறித்த தகவல்களை அறிந்துக் கொள்ள அதிகமாய் வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பதோடு தினசரிகளையும் வாசிக்க தங்களை பழக்கப் படுத்தியும் கொள்ள வேண்டும் என்றார்.
மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கு வாசிப்பில் ஆர்வம் ஏற்படவும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஆக்கப்பூர்வ பங்களிப்பினை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோபாலக்கிருஸ்ணன் இங்குள்ள வல்லம்புரோசா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கும் நிகழ்வில் நினைவுறுத்தினார்.
மாணவர்கள் கல்வி அறிவோடு அரசியல்,நாட்டு நடப்பு,விளையாட்டுத்துறை,உலக தகவல்கள் உட்பட பொது அறிவுகளையும் கொண்டிருப்பது அவசியமானது என்றும் கூறினார்.
வாசிக்கும் பழக்கம் உயிர்ப்பிக்கும் ஒரு தலைமுறையும் ஒரு இனமும் இவ்வுலகில் நன் நிலையிலான எதிர்காலத்தை கொண்டிருப்பதோடு மட்டுமின்றி வாசிப்பு பழக்கம் கொண்டிருக்கும் நம் இன மாணவர்கள் நம் சமூகத்தின் பொக்கிசங்கள் என்றும் அவர் கூறினார்.
அதேவேளையில்,மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடிலும் வளர்ச்சியிலும் ம இ கா தனித்துவ அக்கறையும் கவனமும் கொண்டிருப்பதாகவும் கூறிய அவர் காப்பார் வட்டார தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு மற்றும் கல்வி வளர்ச்சியை தொகுதி ம இ கா அணுக்கமாய் கண்காணித்து வருவதோடு அதன் தேவைகளையும் தொடர்ந்து நிறைவு செய்து வருவதாகவும் கூறினார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்த ம இ காவின் தேசிய பொது செயலாளர் டத்தோ சக்திவேல் தனதுரையில் காப்பார் தொகுதி ம இ கா இந்திய சமுதாயத்திற்கும் தமிழ்ப்பள்ளி மற்றும் நம் மாணவர்கள் கல்வி மேம்பாடு ஆகியவற்றில் முன்னெடுத்து வரும் சேவையையும் துரித நடவடிக்கையையும் வெகுவாக பாராட்டினார்.
இன்றைய மாணவர்கள் நாளை தலைவர்கள் என்பதற்கு ஒப்ப தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நம் சமூகத்தின் நம்பிக்கைகளாகவும் நாட்டின் சிறந்த தலைவர்களாகவும் உருவாக வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நடைபெற்ற புத்தகப் பை வழங்கும் நிகழ்வில் சுமார் 200 மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்பட்டது.     இந்த புத்தகப் பையை மின்சார வாரியம் அன்பளிப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கிய மின்சார வாரியத்திற்கு தொகுதி ம இ காவும் வல்லம்புரோசா தமிழ்ப்பள்ளி நிர்வாகமும் தங்களின் நன்றியினை பதிவு செய்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment