True or Fake?

Wednesday 5 April 2017

தென்னிந்திய வணிகர்களுடன் பிரதமர் சென்னையில் சந்திப்பு

தென்னிந்திய வணிகர்களுடன் பிரதமர் சென்னையில் சந்திப்பு

சென்னை – தனது இந்திய வருகையின் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் நஜிப் துன் ரசாக் தென்னிந்தியாவின் வணிகப் பிரமுகர்களுடன் சென்னையில் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அந்த சந்திப்பில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் பிரதமரின் அதிகாரத்துவ குழுவினரும் கலந்து கொண்டனர். மைக்கி எனப்படும் மலேசிய இந்திய தொழிலியல் வர்த்தக சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரனும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

இது குறித்து, தனது இணையத் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் நஜிப் துன் ரசாக், “இன்று சென்னையில் பலதரப்பட்ட வணிகப் பின்னணியைக் கொண்ட வணிகத் தலைவர்களை நான் சந்தித்தேன். இந்த வட்டமேசைச் சந்திப்பில் பல கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அத்துடன் பலரும் மலேசியாவில் முதலீடுகள் செய்வது குறித்து ஆர்வம் தெரிவித்தனர். இந்தியாவின் தொழில் அதிபர்களின் பங்கேற்புடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வளர்ச்சியடையும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

“நமது இரு நாடுகளுக்கும் இடையில் இன்னும் வளர்க்கப்பட வேண்டிய, விரிவாக்கப்பட வேண்டிய வணிக அம்சங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன என்பதை நானும் பிரதமர் மோடியும் உணர்ந்திருக்கிறோம்” என்று கூறியிருக்கும் நஜிப், 1957-ஆம் ஆண்டில் மலேசியா சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடங்கிய வணிக உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து, 2016-ஆம் ஆண்டில் மலேசியா சென்னையின் 9-வது மிகப் பெரிய ஏற்றுமதி மையமாக வளர்ச்சியடைந்தது என்று தெரிவித்திருக்கிறார்.

அதே வேளையில், சென்னை மலேசியாவின் ஏழாவது மிகப்பெரிய இறக்குமதி மையமாகத் திகழ்கிறது.

இந்தியா மலேசியாவின் 10-வது மிகப் பெரிய வணிகப் பங்காளியாகத் திகழ்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கும் நஜிப், இது மலேசியாவின் மொத்த வணிகத்தில் 3.3 சதவீதம் என்றும் இதன் மதிப்பு 11.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் கூறியிருக்கிறார்.

தற்போது மின்னியல் (டிஜிடல்) போன்ற புதிய தொழில் துறைகளும் விரிவடைந்து வருவதால் நமது இருநாடுகளுக்கும் இடையிலான வணிக உறவுகள் மேலும் பன்மடங்கு உயரும் என்றும் நஜிப் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

மலேசியா வெளிநாட்டு முதலீடுகளுக்கான கவர்ச்சியான மையமாக இன்னும் திகழ்கிறது என்றும் இந்த நிலைப்பாட்டை அப்படியே தொடர்ந்து வைத்திருப்பதற்கு தனது அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ள நஜிப், மலேசியாவின் கதவுகள் வணிகர்களுக்காக எப்போதும் திறந்திருக்கின்றன என்றும் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.





No comments:

Post a Comment