இன்று ம.இ.காவின் கிள்ளான் தொகுதி பேராளர் மாநாட்டில் தொடக்க விழாவில் கலந்து கொண்டிருந்தேன். ம.இ.காவில் இருக்கக்கூடிய ம.இ.கா தொகுதிகளிலேயே கிள்ளான் தொகுதியானது மிகவும் சரித்திரம் வாய்ந்த தொகுதியாகும். அதிகமான இந்தியர்கள் இருக்கக்கூடிய தொகுதியும் ஆகும். அதேநேரத்தில் இத்தொகுதியின் தலைவராக மேலவை சபாநாயகர் டத்தோ எஸ்.ஏ விக்னேஸ்வரன் இருக்கும் காரணத்தால் இத்தொகுதிக்கு இன்னும் சிறப்பான முக்கியத்துவத்தை வழங்கப்பட்டு வருகின்றது.
கிள்ளான் வட்டாரத்தில் இருக்கக்கூடிய தெங்கு கிளானா பகுதியில் அதிகமான இந்திய வியாபாரிகள் இருக்கின்றனர். அவ்வாட்டாரம் நமது பண்பாட்டைப் பிரதிபலிக்கக்கூடிய ஓர் இடமாகவும் திகழ்கின்றது. அதனை "லிட்டல் இந்தியா" என்று பொதுவாகவும் கூறப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, அத்தகைய பிரகடனத்தைச் செய்யக்கூடாது என்று மாநில அரசாங்கம் முடிவு எடுத்திருப்பதாக அறிகின்றோம். இதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். ஏனென்றால், அவ்வாட்டாரம் முழுக்க முழுக்க இந்திய வியாபாரிகளுக்கும் விற்பனைக்கும் தகுந்த இடம். எனவே, பொருளாதார அடிப்படையில் அவ்விடத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலமாக, இந்திய வணீகர்களை உருவாக்குவதற்கும் உதவியாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில், தேசிய அரசாங்கத்தின் உதவியோடு தேவையான உதவிகளை நிச்சயம் வழங்குவோம் என்றும் இதன்வழி தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த 70ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தில் பிரதமர் அவர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்ததைத் தொடர்ந்து அதற்குப் பின் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நான் முன்மொழிந்த இரண்டு கோரிக்கைகளைப் பற்றி கலந்தாலோசித்து அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில் பிரதமர் அவர்களும் அமைச்சரவையில் அக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அமலாக்க நிலைக்குக் கொண்டு வர வேண்டுமென முடிவு செய்துள்ளார்.
அவற்றில் குறிப்பாக, 57ஆம் ஆண்டுக்கு முன் இந்நாட்டிற்குக் குடிப்பெயர்ந்து அல்லது பிறந்திருந்த யாரேனும் குடியுரிமை பெறாத நிலையில் இருப்பின் அவர்களுடைய விவரங்களை நாடு முழுவதும் இருக்கக்கூடிய ம.இ.கா மாநில அலுவலகத்திலோ தொகுதி அலுவலகத்திலோ வழங்கினார்கள் என்றால் அதனை ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமாக அப்பிரச்சனை தொடர்பாக உள்துறை அமைச்சுடந் கலந்துரையாடப்பட்டுத் தீர்வு காணப்படும்.
அதேப்போல, குறைந்த வருமானம் பெறக்கூடிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமின்றி பிரச்சனைகளை எதிர்நோக்கக்கூடிய குடும்பத்தைச் மாணவர்கள் குடும்பச் சூழல் காரணமாகக் கல்வி அடைவை முழுமையாகப் பெற தடையாக இருந்தார்களாயின் அவர்களுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தடையின்றி கல்வி பெறக்கூடிய வாய்ப்பினையும் ஏற்பாடு செய்வதற்காக தங்கும் விடுதி திட்டத்தை முன்மொழிந்திருந்தேன். இது குறித்த ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தைகளைக் கல்வி அமைச்சுடனும் நடத்தியுள்ளேன். தொடர்ந்து, இஃது அமலாக்கத்திற்குக் கொண்டு வருவதற்கான தொடர் முயற்சி மேற்கொள்ளப்படும்.
ம.இ.கா என்பது இந்தியர்களின் நலன்களைக் காக்கவே தோற்றுவிக்கப்பட்ட கட்சியாகும். ஒவ்வொரு கட்சியின் பின்னனியைப் பார்த்தோம் என்றால் தனி மனிதனின் ஆதிக்கம் என்பது நிச்சயம் இருக்கும். ம.இ.கா கட்சியைப் பொறுத்தவரை சமுதாயத்தின் ஆதிக்கமும் சமுதாய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஆதிக்கமே நிறைந்த கட்சியாகும். தனி மனிதன் வருவதும் போவதும், பதவி போராட்டங்கள் ஏற்படுவதும் கட்சியின் இயல்பு. ஆனால், சமுதாயம் என்று வருவதோடு ஒரே குரலோடும் ஒரே இலக்கோடும் அனைவரும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே எனது இலக்காகும்.
டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்
14 ஆகஸ்ட்டு 2016
No comments:
Post a Comment