True or Fake?

Thursday, 9 June 2016

நேர்மறை விமர்சனம் எதிர்மறை விமர்சனம்...!!!

நேர்மறை விமர்சனம் எதிர்மறை விமர்சனம்...!!!

பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகப் பெரிய கோடீஸ்வரரான அவர், ஒருநாள் அத்தனை செல்வத்தையும் துறந்துவிட்டு துறவறம் பூண்டார். கோவணத்துடன் கிளம்பினார். கையில் திருவோடு வைத்திருப்பது கூட உண்மையான துறவுக்கு எதிரானது என்பது அவர் கருத்து.

ஒருமுறை ஒரு வயல் வழியாக நடந்து சென்றவர் மிகவும் களைப்படைந்தார். அப்படியே வரப்பில் படுத்து உறங்கினார்.
வளர்ந்திருந்த நெற்செடிகள் காற்றில் அசைந்து அவரின் சட்டை அணிந்திராத உடம்பில் குத்தி ரணப்படுத்தின. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாதவராக அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

அப்போது பெண்கள் சிலர் அந்த வரப்பு வழியாக நடந்து வந்தனர். பட்டினத்தார் வரப்பின் மீது படுத்திருந்த காரணத்தால் அவர்களால் அவரைத் தாண்டி செல்வது கடினமாக இருந்தது. அவர்களுக்கு அவர் பட்டினத்தார் என்பது தெரியாது. யாரோ ஒரு சாமியார் என்று நினைத்தனர்.

அப்போது அதில் ஒரு பெண், “”யாரோ ஒரு மகான் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது,” என்று கூறி வரப்பை விட்டுக் கீழே இறங்கி நடந்தாள்.
இதைக் கேட்ட இன்னொரு பெண் மணியோ, “”இவரா பெரிய மகான்? ஆசையை அடக்க முடியாமல் தூங்குவதற்குக் கூட வரப்பை தலையணையாகப் பயன்படுத்திக் கொண்டு தூங்குகிறார் பாரு,” என்று இளக்காரமாகவும், கோபமாகவும் பேசினாள்.
இதனைக் கேட்ட பட்டினத்தார் அதிர்ச்சி அடைந்தார்.
“அந்தப் பெண்ணுக்கு இருக்கும் புத்தி கூட தனக்கில்லாமல் போய் விட்டதே…’ என்று வேதனைப்பட்ட அவர், அந்த பெண்கள் அங்கிருந்து கடந்து போனதும், வரப்பிலிருந்த தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.

சற்று நேரத்தில் அந்தப் பெண்கள் திரும்பி வந்தனர். அப்போது அந்த சாமியார் வரப்பிலிருந்து கீழே படுத்திருப்பதைப் பார்த்த அந்தப் பெண்மணி, “”பார்த்தாயா, நீ சொன்னதை கேட்டு வரப்பிலிருந்து தனது தலையைக் கீழே வைத்துப் படுத்துவிட்டார். இப்போது சொல் அவர் மிகப் பெரிய மகான்தானே?” என்று அகமகிழ்ந்து கூறினாள் ஒரு பெண்.

“”இவரா பெரிய மகான்? இந்த வழியாகப் போகிறவர்கள் எல்லாம் தன்னைப் பற்றி என்ன பேசிச் செல்கின்றனர் என்று ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றிக் கவலைப்படுகிறார். இவரைப் போய் பெரிய மகான் என்று சொல்கிறாயே!” என்றாள் அந்த இரண்டாவது பெண்மணி.
இதைக் கேட்டு பட்டினத்தார் உண்மையிலேயே அதிர்ந்து போனார். இனிமேல் யாருடையே விமர்சனத்திற்காகவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது கூடாது என்று அப்போது முதல் அவர் திடமாக முடிவெடுத்தார்.

விமர்சனத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று நேர்மறை விமர்சனம்; இன்னொன்று எதிர்மறை விமர்சனம்.
நேர்மறையான எண்ணம் கொண்டவர்களின் விமர்சனம் எப்போதும் திருப்தி அளிக்கும் விதமாகவே இருக்கும். அந்த முதல் பெண்மணி கூறியதைப் போலவே அது இருக்கும்.
எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் செய்யும் விமர்சனம் எப்போதும் குற்றம், குறைகளைக் காண்பதாகவே இருக்கும். அதாவது அந்த இரண்டாவது பெண்மணியைப்போல.
நியாயமான விமர்சனம்தான் உண்மையானதாக இருக்கும். ஆனால், அந்த வகை விமர்சனம் கிடைப்பது என்பது மிகவும் அரிது. அதில் குற்றம் குறைகள் சுட்டிக் காட்டப்படவும் செய்யும். நல்ல தன்மைகள் பாராட்டப்படவும் கூடும்.

எனவே, இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களுக்காக காத்துக் கிடக்காமல் உங்கள் உள்ளத்திற்கு எது நேர்மையானதாகத் தெரிகிறதோ, அந்த பாதையில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருங்கள். விமர்சனங்களைப் புறக்கணித்து விடுங்கள்.

வாழ்க்கை என்பது இறைவன் நமக்குத் தந்திருக்கும் உரிமை. இந்த மண்ணுலகில் பிறந்து விட்டோம். நல்லதை செய்து நலமாக வாழ்வோம்!.

படித்ததில்-பிடித்தது...

No comments:

Post a Comment